Monday, October 18, 2010

பழனி தண்டாயுதபாணி சுவாமி




முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.

பெயர்க் காரணம்


பழனி தண்டாயுதபாணி கோயில்

பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்தப் பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

இதே போன்று, இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்த முருகப் பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார்.

மகன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்தப் பழனி மலைக்கு வந்தனர். முருகப் பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக்கோவில் தல புராணம் கூறுகிறது.


மலை உருவான கதை



பழனி மலையின் தோற்றம்

பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப் பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.

சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைக் குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

அப்போது முருகப் பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.

இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. சிறிது யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனைக் கீழே இறங்குமாறு கூறினான்.

ஆனால் அந்தச் சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.

பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப் பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.

இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள் பாலிப்பதாக அப்போது அருளினார்.

அன்றுமுதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள். இதனால்தான், பழனி மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி சிறப்பு

திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்தப் பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி கோவிலில் முருகப் பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப் பெருமானை தரிசிக்க மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.

குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்னர்தான் மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரைத் தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக் காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரம் இந்தக் கோவிலின் தலவிருட்சம்தான். ஆம்... இங்குள்ள தலமரம் நெல்லி மரமே.


ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம்


ஆண்டிக் கோலத்தில் முருகன்

இங்கு முருகப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்

நலம் தரும் கிரிவலம்


பழனி மலையின் இரவுத் தோற்றம்

பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளைக் கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

விழாக்கள்
  • திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
  • தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
சிறப்புக்கள்
  • முருகப் பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.
  • பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.
  • மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
  • ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.
  • சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேகக் காலத்தில் நன்கு அறியலாம்.
சர்ச்சைக்குரிய விவாதம்

பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவது படை வீடு என்று கூறுவோரும் உண்டு.

பயண வசதி

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து மற்றும் இரயில் பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலையில் வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. தற்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Sunday, October 10, 2010

ஸ்ரீ ராகவேந்திரர் நாம மகிமை



1. ராகவேந்திரர் நாமம் தன்னை நாளும் இங்கே ஜெபிக்கவே!
க்ஷேமம் உண்டாம்! ஜெயமும் உண்டாம்! ஜெகமெலாம் அருள்
தழைக்கவே!!

2. நாதன் நாமம் நாளும் பாட, நலமும் வளமும் கொழிக்கவே!
வேதம் போலது விழைந்து சொல்பவர், வெற்றிக்கும்
வழி வகுக்கவே!!

3. எடுத்த செயல்கள் அனைத்தும் இங்கே வெற்றி பெறவே நாடுவோம்!
எனையும் காக்கும் இறைவன் நாமம் இனிய தமிழில்
பாடுவோம்!!

4. நாளும் கோளும் நலமே செயவே நயந்து இங்கே நாடுவோம்!
நல்லதே செய நாடும் உள்ளம் நாளும் வளரப்
பாடுவோம்!!

5. துங்கபத்ரா நதியின் கரைதனில் தோன்றும் துணைவனை நாடுவோம்!
இங்கே இன்றே என் முன்னே வர இசைந்த குருவினைப்
பாடுவோம்!!

6. காலம் காலமாய் உலகைக் காக்கும் கருணைதனையே நாடுவோம்!
கற்றதும் மனம் களிப்பதும் தரும் கன்னித் தமிழில்
பாடுவோம்!!

7. ஞாலம் போற்றிடும் ஞானம் தந்திடும் நாதன் அருள் தனை நாடுவோம்!
நல்லதும் செய வல்லதீதென நாமும் அறிந்ததைப்
பாடுவோம்!!

8. மனிதராய் இங்கு பிறர்க்கு நலம் தரும் மனமதும் வேண்டி நாடுவோம்!
புனிதம் நாமம் புவனம் காக்கும்; போற்றிப் புகழ்ந்து
பாடுவோம்!!

9. இல்லம் காக்க ஏற்றதீதென எனக்கும் உரைத்திட்ட நாயகன்!
சொல்லும் செயலும் வேற்றுமையின்றி சுகம் தரும்
வழியுரைப்பவன்!!

10. மன இருள்தனை நீக்கி அருளும் மகிமைதனையே நாடுவோம்!
அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன் புகழ்தனைப்
பாடுவோம்!!





கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
நம் நாட்டில் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.



இந்தியா பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வடதிசையில் காந்த ஈர்ப்பு அதிக மிருக்கும். இதனால், இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது, தேவைக்கு அதிகமாக மூளைக்கு ரத்தம் பாயும். இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற் பயிற்சி செய்து விட்டு, ஓய்வெடுக்கும் போது வடக்கில் தலை வைக்கவே கூடாது. இதனால் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.



அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட, மேல் நோக்கி இழுக்கப்படும். எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும். இதைப்போலவே, வடக்கில் தலை வைத்துப் படுக்கும்போது, ரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது.




பூமத்திய ரேகைக்கு கீழுள்ள தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காந்த ஈர்ப்பு தென்திசையில் இருக்கிறது. எனவே, இந்நாடுகளில் தெற்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது.

 
வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன:

* ரிக் வேதம்
* யஜுர் வேதம்
* சாம வேதம்
* அதர்வண வேதம்

என்பனவாகும்.

இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.

இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.


வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

1. "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்)

கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.


முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.


 

பிடிக்காதது நடந்துவிட்டதா? இதோ! ஒரு எளிய பரிகாரம்

நம் வாழ்வில், நமக்கு பிடிக்காத சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. அப்படி நடந்து, அவற்றுக்கு பரிகாரம் செய்யாமல் விட்டுவிட்டால், அதற்கும் தண்டனை உண்டு என்கிறது சாஸ்திரம். இதற்கு ஒரு கதையே இருக்கிறது. சததனு என்ற மன்னன் இருந்தான். அவனுடைய மனைவி சைப்யை. கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்பவள். இவர்கள் ஒருநாள் உலா செல்லும் போது, எதிரே ஒருவன் வந்தான். அவன் அவர்களது
குலகுருவுக்கு நண்பன். ஆனால், எந்த தர்மத்தையும் கடைபிடிக்காத மகாகெட்டவன். கெட்டவர்களைப் பார்ப்பதே கேடு என்று நம்பிய காலம் அது. குருவின் நண்பன் என்பதால் சததனு அவனைப் பார்த்து "சுகமாக இருக்கிறீர்களா?' என நலம் விசாரித்து விட்டு சென்றான். அவனுடன் வந்த சைப்யையோ, அவனைப் பார்த்ததனால் ஏற்பட்ட பாவம் தீர, மூன்றே மூன்று எளிய பரிகாரங்களை அந்த இடத்திலேயே செய்தாள். என்ன தெரியுமா? சுட்டெரிக்கும் சூரியனை அண்ணாந்து பார்த்தாள். நிலத்தைக் குனிந்து பார்த்தாள். அங்கே நின்ற ஒரு பசுவைப் பார்த்தாள். அவளது பாவம் நீங்கிவிட்டது. சூரியன் பாவங்களை சுட்டெரித்தது. பூமி அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட கோபத்தை தடுத்து, பொறுமையைத் தந்தது. பசுவிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் அவளுக்கு அருள் செய்தனர்.

இதனால், அவள் மறுபிறவியிலும் இளவரசியாகவே பிறந்தாள். மன்னன் அதை பெரிதுபடுத்தாமல் போய்விட்டான். அதன் விளைவு, நல்லவனாக இருந்தும் அடுத்த பிறவியில் மிருகமாகப் பிறந்தான். இந்தக் காலத்தில் இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டிய நிலை நம் எல்லோருக்குமே இருக்கிறது...அப்படித்தானே!




சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.

அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.

அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.

சரஸ்வதிக்கே சாபம்




சிவனது திருவிளையாடலில் இந்த வாரம் 'சங்கப்பலகை கொடுத்த படலம்' பற்றி காண்போம். ஒரு சமயம் பிரம்மா பத்து அசுவமேத யாகம் செய்து, நீராடுவதற்காக சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி மூவரோடும் கங்கைக்கு சென்றார். அப்படி செல்லும் வழியில் சரஸ்வதி ஒரு பெண்ணின் இசையில் மயங்கி நின்றதால் பிரம்மா சாவித்திரி, காயத்ரியோடு கங்கையில் நீராடினார். தன்னை விட்டு விட்டு இவர்கள் நீராடியதால் சரஸ்வதி கோபித்துக்கொண்டார். இதையறிந்த பிரம்மா, ''குற்றம் உன்மீது இருக்க என் மீது நீ கோபித்ததால், அளவில்லாத மனிதப்பிறவி எடுப்பாய்'' என சாபமிட்டார். மனம் வருந்திய சரஸ்வதி, தங்களது அருமைத்துணைவியான நான் மனிதப்பிறவி எடுத்து மயங்கலாமா என மன்றாடினாள். மனமிறங்கிய பிரம்மா, பாண்டிய நாட்டில் அகரம் நீங்கலாக மீதி உள்ள நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக பிறக்கட்டும் என்று சாபத்தை மாற்றி தந்தார். அகரம் என்பது முதல் எழுத்து. அதே போல் ஆதி பகவனே உலகத்துக்கு முதல்வனானான். எனவே ஆதி பகவானான சோமசுந்தரர், இந்த முதல் இடத்துக்கு புலவராக வருவார் என கூறி மறைந்தார்.

இதன் படி நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக தோன்றினர். அவர்கள் வடமொழியும் தமிழும் நன்கு கற்றவராக விளங்கி, அகத்தியர் முதல் தொல்காப்பியர் வரை எழுதிய இலக்கண நூல்களை ஆராய்ந்தனர். மற்றும் பல பாடல்களை பாடினர். இவர்களை எல்லாம் சோமசுந்தரர் ஒரு புலவராக அவதரித்து மதுரைக்கு கொண்டு வந்தார்.

வங்கிய சேகர பாண்டியன், அப்புலவர்களுக்கு பரிசுகள் பல தந்து, சங்க மண்டபம் ஒன்று அமைத்து தந்தான். அப்புலவர்கள் தங்கள் புலமையால் பிற தேசத்து புலவர்களை வென்றனர். ஒரு நாள் அவர்கள் புலமையை அறிய சங்கப்பலகை தருமாறு வேண்டினர். சிவனும் அவ்வாறே பலகை தந்ததுடன், தானும் அவர்களுடன் ஒரு புலவராய் வந்து விளங்கினார். புலவர்கள் பல அரிய நூல்களை இயற்றினர்.

வில்வத்தின் விளைவு: கைலாயத்தில் உள்ள சோலையில் ஒரு வில்வ மரத்தடியில் சிவன் பார்வதி தேவிக்கு சிவாகமங்களை உபதேசித்து கொண்டிருந்தார்.வில்வ மரத்திலிருந்த கருங்குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து சிவன் மீதும், பார்வதி மீதும் பாதம் முதல் தலை வரை போட்டது. குரங்கின் இந்த செயலால் கோபத்துடன் மேலே பார்த்தார் பார்வதி. உடனே குரங்கிற்கு அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் வரப்பெற்றது. உடனே குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் பாதத்தில் விழுந்து அடியேன் செய்த பிழையை பொறுத்தருள்க என வேண்டியது.

அதற்கு சிவன், ''குரங்கே நீ கவலைப்பட வேண்டாம். ஒரு வில்வ இலையால் எம்மை அர்ச்சித்தாலே எல்லா நலன்களும் கிடைக்கும். ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளைப்பறித்து எம்மீது போட்டுள்ளாய். ஆகவே நீ மண்ணுலகில் அரிச்சந்திர குலத்தில் அரசனாகப்பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவித்து பின் கயிலை வந்து சேர்வாயாக'' என அருள்புரிந்தார்.
இப்படித்தான் தீபாவளித் திருநாள்


விஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் பவுமன். சிவபெருமானிடம் பக்தி கொண்ட இவன் சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு இணையாக விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று நிபந்தனையுடன் வரம் ஒன்றையும் பெற்றான்.

இறைவனால் அளிக்கப்படும் நல்ல வாய்ப்புகள் நல்ல வழியில் செல்லும் பொழுது நன்மை கிடைக்கிறது. ஆனால் அதிகமான செல்வம், அதிகாரம் போன்றவை வந்து விட்டால் மனம் தவறான பாதையை நோக்கியே போகிறது. பவுமனும் இப்படித்தான் தவறான வழிகளில் சென்றான். தன்னைப் பற்றித் தாயிடம் புகார்கள் சென்றாலும் தாய் எப்படித் தன்னைக் கொல்வாள் என்கிற எண்ணத்தில் தவறுகளை அதிகமாக்கிக் கொண்டே இருந்தான். பூலோகத்தில் இருந்த மக்களும், தேவலோகத்தில் தேவர்களும் இவனுடைய கொடுமைகளால் மிகவும் பாதிப்படைந்தனர்.

சிவனிடம் சொன்னார்கள். விஷ்ணுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல்லத் தயங்கினார்கள். தாயான பூமாதேவியோ, பிறர் தனக்கு செய்யும் கொடுமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமைசாலி. சொந்த மகனைக் கொல்ல அவள் சம்மதிப்பாளா? என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான்.

இருப்பினும் தாயான பூமாதேவி அவனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார்.பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.

அவன் இறக்கும் சமயத்தில் பூமாதேவிக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், "எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

இப்படித்தான் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியது.

  • இறைவனுக்கே மகனாக இருந்த போதிலும் சில நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும்.

    தாய் ஒருவனை எவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.
  • இறப்பு என்பது தவிர்க்க இயலாது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும்.
-இப்படி சில படிப்பினைகளைச் சொல்லும் தீபாவளி சொல்வது இதுதான்.

நல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் எனும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்குப் பயனுடையதாய் வாழுங்கள்.

ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம் 236 அடி <உயரமுடையது. முன்பக்க அகலம் 166 அடி. பக்கவாட்டு அகலம் 97 அடி. ஆசியாவிலேயே மிக <உயரமானது. இதை அமைக்க 1.75 கோடி ரூபாய் செலவானது. 13 நிலைகள் கொண்டது. கோபுரத்தின் எடை ஒரு லட்சத்து 28 ஆயிரம் டன். உச்சியில் 13 கலசங்கள் உள்ளன. கலசங்களின் உயரம் 10.5 அடி. ஒன்றின் எடை 135 கிலோ. கோபுரத்தைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆயிற்று. இதற்கு 2 ஆயிரம் டன் சிமென்ட், 30 டன் இரும்பு தேவைப்பட்டது. மாமல்லபுரம் சிற்பி கணபதி ஸ்தபதி இதன் திட்டவடிவை அமைத்தார். சிவப்பிரகாச ஸ்தபதி கட்டி முடித்தார்.






இந்து மதம் சொல்லும் கீழ்காணும் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

வேதம்-4
1. இருக்கு 2. சாமம் 3. யசுர் 4. அதர்வம்

வேதாங்கம்-6
1. சிக்ஷை 2. சந்தசு 3. சோதிடம் 4. வியாகரணம் 5. நிருத்தம் 6. கற்பம்

உபாங்கம்-4
1. மீமாஞ்சை 2. நியாயம் 3. புராணம் 4. ஸ்மிருதி

மீமாஞ்சை-2
1. பூருவமோமாஞ்சை 2. உத்தரமீமாஞ்சை

நியாயம்-2
1.கெளதம சூத்திரம் 2. காணத சூத்திரம்

புராணம்-18
1.பிரம புராணம் 2. பதும புராணம் 3. வைணவ புராணம் 4. சைவ புராணம் 5. பாகவத புராணம் 6. பவிடிய புராணம் 7. நாரதீய புராணம் 8. மார்க்கண்டேய புராணம் 9. ஆக்கினேய புராணம் 10. பிரமகைவர்த்த புராணம் 11. இலிங்க புராணம் 12. வராக புராணம் 13. காந்த புராணம் 14. வாமண புராணம் 15. கூர்ம புராணம் 16. மற்ச புராணம் 17. காருட புராணம் 18. பிரமாண்ட புராணம்

ஸ்மிருதி-18
1. மனு ஸ்மிருதி 2. பிரகஸ்பதி ஸ்மிருதி 3. தக்ஷ ஸ்மிருதி 4. யம ஸ்மிருதி 5. கெளதம ஸ்மிருதி 6. அங்கிர ஸ்மிருதி 7. யாஞ்ஞவ்ல்கிய ஸ்மிருதி 8. பிரசேத ஸ்மிருதி 9. சாதாதப ஸ்மிருதி 10.பராசர ஸ்மிருதி 11. சம்வர்த்த ஸ்மிருதி 12. உசன ஸ்மிருதி 13. சங்க ஸ்மிருதி 14. லிகித ஸ்மிருதி 15. அத்திரி ஸ்மிருதி 16. விஷ்ணு ஸ்மிருதி 17. ஆபத்தம்ப ஸ்மிருதி 18. ஹாரித ஸ்மிருதி

இதிகாசம்-3
1.சிவரகசியம் 2. இராமாயணம் 3. பாரதம்

சைவாகமம்-28
1. காமிகம் 2. யோகஜம் 3. சிந்தியம் 4. காரணம் 5. அசிதம் 6. தீப்தம் 7. சூக்குமம் 8. சகக்சிரம் 9. அஞ்சுமான் 10. சுப்பிரபேதம் 11. விசயம் 12. நிச்சுவாசம் 13. சுவாயம்புவம் 14. ஆக்னேயம் 15. வீரம் 16. ரெளரவம் 17. மகுடம் 18. விமலம் 19. சந்திரஞானம் 20. முகவிம்பம் 21. புரோற்கீதம் 22. லளிதம் 23. சித்தம் 24. சந்தானம் 25. சர்வோக்தம் 26. பாரமேசுவரம் 27. கிரணம் 28. வாதுளம்

வைஷ்ணவாகமம்-2
1.பாஞ்சராத்திரம் 2. வைகானசம்

மேலுலகம்-7
1. பூலோகம் 2. புவர்லோகம் 3. சுவர்லோகம் 4. மகர்லோகம் 5. சனலோகம் 6. தபோலோகம் 7. சத்தியலோகம்

கீழுலகம்-7
1. அதலம் 2. விதலம் 3. சுதலம் 4. தலாதலம் 5. ரசாதலம் 6. மகாதலம் 7. பாதாளம்

தூவீபம்-7
1. ஜம்பூத்துவீபம் 2. பிலஷத்துவீபம் 3. சான்மலித்துவீபம் 4. குசத்துவீபம் 5. கிரெளஞ்சத்துவீபம் 6. சாகத்துவீபம் 7. புஷ்கரத்துவீபம்

சமுத்திரம்-7
1.லவண சமுத்திரம் ( லவணம்-உப்பு) 2. இக்ஷீ சமுத்திரம் ( இக்ஷூ-கருப்பஞ்சாறு) 3. சுரா சமுத்திரம் (சுரா-கள்ளு) 4. சர்ப்பி சமுத்திரம் (சர்ப்பி-நெய்) 5. ததி சமுத்திரம் (ததி- தயிர்) 6. க்ஷீர சமுத்திரம் (க்ஷீரம்-பால்) 7. சுத்தோதக சமுத்திரம் (சுத்தோதகம்-நல்ல நீர்)

வருஷம்-9
1. பாரத வருஷம் 2. கிம்புருஷ வருஷம் 3. ஹரி வருஷம் 4. இளாவிருத வருஷம் 5. இரமியக வருஷம் 6. இரண்மய வருஷம் 7. குரு வருஷம் 8. பத்திராசுவ வருஷம் 9. கேதுமாலவ வருஷம்

முத்தி நகரம்-7
1. அயோத்தி 2. மதுரை 3. மாயை (ஹரித்துவார்) 4. காசி 5. காஞ்சி 6. அவந்தி 7.துவாரகை.

பாடை நிலம்-18
1.திராவிடம் 2. சிங்களம் 3. சோனகம் 4. சாவகம் 5. சீனம் 6. துளுவம் 7. குடகம் 8. கொங்கணம் 9. கன்னடம் 10. கொல்லம் 11. தெலுங்கம் 12. கலிங்கம் 13. வங்கம் 14. கங்கம் 15. மகதம் 16.கடாரம் 17. கெளடம் 18. குசலம்.
தவறைத் திருத்துங்கள்


* தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து தியானம் செய்து மனதை ஒருமுகப்படுத்துங்கள். தியானம் செய்ய தனியிடம் தேவை. அந்த இடம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது
* சைவ உணவை சாப்பிடுங்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். மிதமான உணவு ஆரோக்கியவாழ்வுக்கு மிகவும் ஏற்றது.
* உங்கள் வருமானத்தில் பத்தில் ஒருமடங்கை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கப் பழகுங்கள்.
* உங்களது தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எளிமையில் ஈடுபாடு கொள்ளுங்கள். மனதிருப்தியே இன்ப வாழ்வு என்பதை உணருங்கள்.
* எந்த நிலையிலும் உண்மையை மட்டும் பேசுங்கள். கொஞ்சமாகப் பேசுங்கள். இனிமையான மற்றவர் மனம் கவரும் விதத்தில் பேசுங்கள்.
* செய்த தவறுகளைக் குறித்து எண்ணிப் பார்த்து உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் சுயசோதனை என்பர். அடுத்தவர்களின் குறையைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
-சிவானந்தர்

ஆன்மாவைத் தெரியுமா?



ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தன்மையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும், சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.

ஆன்மாக்கள் நல்வினை, தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந்துழலும்.

நால்வகைத் தோற்றங்கள்:

அண்டசம், சுவேதசம், உற்பிச்சம்,சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் வியர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சுராயுசம் கருப்பையிற் தோன்றுவன.

எழுவகைப் பிறப்புகள்:

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.
கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வியர்வையிலே கிருமி, பேன் முதலிய சில ஊர்வனவும் விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர், கொம்பு, கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனி பேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனி பேதம், நாற்கால் விலங்குகள் பத்து நூறாயிரயோனி பேதம், பறவை பத்து நூறாயிரயோனி பேதம், நீர்வாழ்வன பத்து நூறாயிரயோனி பேதம், ஊர்வன பதினைந்து நூறாயிரயோனி பேதம், தாவரம் பத்தொன்பது நூறாயிரயோனி பேதம் ஆக எண்பத்து நான்கு நூறாயிரயோனி பேதம்.

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், காது எனும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என ஆறு வகைப்படும். புல்லும்,மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள்.

சிப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள். கரையானும், எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தகத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும், வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும், பறவையும் அந்நான்கினோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும், மனிதர்களும் அவ்வைந்தினோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அனுபவிக்கும். அப்படி அனுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இருவினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து அவைகளின் பயன்களாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும்.

இப்படியே,தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும், காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படி பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகள் எல்லாவற்றிலும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது. உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சில காலம் வாழ்ந்து அழியினும் அழியும். மூன்று வயதுக்கு மேல் பதினாறு வயது வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும்.

அதற்கு மேல் நாற்பது வயது வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மைதான். அழியுங்காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்தச் சரீரம், உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

மன, உடல் நோய்களை அகற்றும் ஸ்லோகம்

மன, உடல் நோய்களை அகற்றும் ஸ்லோகம்

அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்


நச்யந்தி ஸகலா ரோகா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்

ஆர்த்தா விஷண்ணா சிதிலாஸ்ச பீதா கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா

ஸங்கீர்த்ய நாராயண ஸப்தமாத்ரம் விமுக்தது கா ஸுகினோ பவந்து.




பொதுப் பொருள்:அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்ற மகாவிஷ்ணுவின் நாமங்களை, உள்ளம் நெகிழ உச்சரிப்பவர்களுடைய அனைத்து வகை நோய்களும் விரைவில் அவர்களை விட்டு விலகும். மன நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் துக்கத்தில் ஆழ்ந்தவர்களும் பய உணர்வு கொண்டவர்களும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாறு நாராயணனின் சங்கீதமான நாமங்களை இதயம் கசிந்து சொல்வார்களானால், தத்தமது உபாதைகளிலிருந்து அவர்கள் விடுபட்டு நலம் பெறுவார்கள்.