தக்ஷிண மேரு - 1000
தென் திசையில் இருக்கும் பெரும் மலை என்ற பொருளில் தக்ஷிண மேரு என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆயிரம் வயது....!
பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் கடந்த வாரகாலத்தில் பல்வேறு செய்திகளை அளித்தார்கள். பெரிய கோவிலின் சிறப்புகள் மற்றும் சரித்தரத்தை சுவைபட எழுதினார்கள். பிரகதீஸ்வரர் கோவில் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
தஞ்சை பெரிய கோவில் தென்னிந்திய கட்டட கலைகளிலிலும், ஆகம விதியின் அடிப்படையிலும் தனித்துவமாக இருக்கிறது. கருவறைக்கு மேல் விமான அமைப்புக்கு பதிலாக, கருவறைக்கு மேல் பெரிய கோபுரம் கொண்ட கோவிலாக திகழ்கிறது.
கோபுரத்தில் இருக்கும் சிலைகளை பெரிதாக காண படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.
கருவறைக்கு மேல் இருக்கும் கோபுரம் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது. தற்காலத்தில் மட்டுமல்ல இது எக்காலத்திலும் சாத்தியமா என வியக்க வைக்கிறது. திருச்சிக்கு அருகே 60 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்ததை சாதனையாக கூறுகிறார்கள். உண்மையில் கல்லை கொண்டு வருவது சாதனை அல்ல, அந்த கல்லை கொண்டு கோபுரத்தில் சிலைகள், சின்ன சின்ன சிற்பங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கனக்கான டன் எடை உள்ள கல்லின் எதோ ஒரு முனையில் தவறு செய்தாலும் மொத்த கோபுரமும் வீண் என்பதை நினைவு கொள்ளுங்கள்...!
கோபுரம், கோவில் கருவறை, கருவறைக்குள் இருக்கும் சிவலிங்கம் என அனைத்தும் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது . ஒரே கல்லில் செய்ய வேண்டும் என ஏன் தோன்ற வேண்டும் என்றால் இது ‘ஏகம்’ என்ற ஒருமை தன்மை வாய்ந்த அத்வைத்த கோவில் ஆகும். சிவனை தவிர வேறு எதுவும் வழிபடாத ஒருமை தன்மை வாய்ந்ததாக இருந்து, பின்பு பிற்காலத்தில் மாற்றம் அடைந்தது.
சிவனை மட்டும் முழு முதற்கடவுளாக கொண்டு லிங்கத்தை மட்டுமே மனதில் வைத்து கட்டப்பட்டது. இங்கே சக்திக்கும், நந்திக்கும் முக்கியத்துவம் முன்பு அளிக்கப்படவில்லை. ராஜராஜனுக்கு பிறகு வந்த பல்லவ அரசர்களே தற்சமயம் இருக்கும் நந்தியை ஸ்தாபித்தார்கள். பிற்கால சைவ சிந்தாந்த ஆகம சாஸ்திரங்கள் லிங்கத்தின் அளவுக்கு நந்தி இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு இவ்வாறு உருவாக்கப்பட்டது.
பெரியகோவிலின் தல விருட்சம் மற்றும் அதன் அடியில் வீற்றிருக்கும் காளியின் அம்சம் கொண்ட ப்ரதியங்கரா தேவி சக்தியாக இக்கோவிலில் விளங்குகிறது.
பூமியில் நிழல் விழுகாத கோபுர கலசம்
கோபுரத்தின் நிழல் கீழே விழுகாது என சிலர் கூறுவார்கள். உண்மையில் கோபுர நிழல் கீழே விழும். ஆனால் கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம் நிழலில் எப்பொழுதும் தெரியாது. கோபுர கலசம் நிழல் விழுகாது என்ற விளக்கம் நாளடைவில் கோபுர நிழல் விழுகாது என மருவியது.
நவக்கிரங்களின் அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தனித்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களும் லிங்க ரூபமாகவே இருக்கிறது. அனைத்து இறை சக்தியையும் லிங்கமாகவே கொண்டு முன்பு கட்டபட்டு பின்பு வந்த அரசர்களால் அது விக்ரஹங்களால மாற்றபட்டது. எனினும் நவகிரஹங்கள் இன்றும் லிங்க ரூபமாகவே இருப்பது தனிச்சிறப்பு.
கோவிலின் பக்கவாட்டு சுவர் பகுதியில் இருக்கும் விஷ்ணு துர்க்கை மிகவும் அழகுவாய்ந்த சொரூபம். என் நினைவுக்கு எட்டியவரை இவ்வளவு அழகுடன் துர்க்கை ரூபத்தை நான் கண்டது இல்லை.
கோவிலின் உள் பிரகாரத்தில் இருக்கும் கற்சங்கிலி மற்றும் கல் ஓடு வேலைகள் சிற்பக்கலையின் உச்சபட்ச சாதனைகள்
முன்பு ஒரு சமயம் நான் சென்ற பொழுது ஒரு அவலத்தை கண்டேன். கல்வெட்டு உள்ள பகுதியில் பொங்கல் பிரசாதம் சாப்பிட்டு விட்டு கைகள் துடைத்து விட்டு சென்று இருந்தார்கள். கல்வெட்டின் எழுத்து இருக்கும் குழிகளில் உணவு துகள்கள் நிரம்பி இருந்தது. வேதனை அடைந்து, என் கைகளில் இருந்த துணியால் அந்த கழிவுகளை துடைக்கும் பொழுது ஒரு கோவில் அதிகாரி நான் கல்வெட்டை சேதப்படுத்துவதாக கடிந்து கொண்டார். ஆயிரம் ஆண்டு விழாவிற்கு கோவில் பொலிவுடன் இருப்பது பெரிய காரியம் அல்ல. உண்மையில் பின்வரும் காலத்தில் அவை காக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆயிரம் வருடத்தை கடந்த பல கோவில்கள் இருக்கிறது. காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தை பார்த்து தான் ராஜராஜ சோழனுக்கு பெரிய கற்கோவில் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாம். ஆனால் அத்தகைய கோவிலுக்கு எல்லாம் விழா கொண்டாட வில்லை என்பது இத்தருணத்தில் நினைவு கொள்வோம்.
ராஜராஜ சோழன் ஒரு பேரரசனாக, சக்ரவர்த்தியாக, ஜனநாயகத்தை முதலில் அமைத்த மன்னனாக கூறுகிறார்கள். உண்மையில் ராஜராஜ சோழன் ஒரு ஆன்மீக உயர்நிலையில் இருந்தவன். அந்தணர்களிடம் இருந்து சைவ நூல்களை மீட்டு எடுத்தது அவற்றை காக்க முற்பட்டது, பல்வேறு சமயத்திற்கு சம நீதி கொடுத்தது, பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடித்து பிறகு முடி துறந்து தனிமையில் வாழ்ந்தது என அவரின் ஆன்மீக சுவடுகள் ஏராளம். இன்று அத்தகைய மாமனிதனின் சமாதி கேட்பாரற்று கிடக்கிறது. அந்த சமாதி கோவிலை நிர்வகிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
சதய நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்கள் நானும் ராஜராஜனும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என கூறிக்கொள்ளலாம்.
பிற்கால சந்ததியினருக்கான தஞ்சாவூர் கல்வெட்டுடன் ஸ்வாமி ஓம்கார் :)
டிஸ்கி : இது எல்லாம் இப்ப எதுக்கு சொல்றேனு நீங்க நினைக்கலாம். தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டி வச்சா.. நமக்கு பின்னாடி வரும் சந்ததியினர் படிச்சு புரிஞ்சுக்குவாங்கல்லனு...நினைத்தேன். அங்கே இருக்கும் கல்வெட்டுக்கள் இப்பொழுது சேதமடுத்தியும்,இடமாற்றப்படுவதாலும் இங்கே பதிவாக எழுதிவிட்டேன்... அது உங்க மனசுல கல்வெட்டா இருகட்டுமே!
பெரிய கோவில் படங்கள் உதவி : ஸ்வாமி ஓம்கார் :)
No comments:
Post a Comment