Sunday, October 10, 2010

லட்சுமி வந்தாச்சு

- 17th August 2010, 08:02 PM

ஆக., 20 - வரலட்சுமி விரதம்





ஆவணி மாதத்தில் லட்சுமியைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் வரலட்சுமி விரதத்தில் குறிப்பிடப்படும், "வரலட்சுமி' பற்றி ஸ்ரீசூக்தம் என்ற ஸ்தோத்திரத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. 35 ஸ்தோத்திரங்களைக் கொண்ட இந்த தொகுப்பில், "ஸித்த லக்ஷ்மீர்' எனத்துவங்கும் 29வது ஸ்தோத்திரத்தில், வரலட்சுமியின் பெயர் வருகிறது.
"நினைத்ததை நிறைவேற்றவல்ல சித்த லட்சுமியாகவும், முக்தியைத் தரவல்ல மோட்ச லட்சுமியாகவும், வெற்றியைத் தரவல்ல ஜெயலட்சுமியாகவும், தாமரைக்குளத்தில் தோன்றியவளாகவும், செல்வத்தை தரவல்ல திருமகளாகவும், வரங்களைத் தரவல்ல வரலட்சுமியாகவும் இருக்கிற நீ, எனக்கு எப்போதும், அருள் நிறைந்தவளாக இருப்பாய்...' என்பது அந்த ஸ்தோத்திரத்தின் பொருள்.

வரலட்சுமி விரதம், ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்படும். இந்த விரதம் பெண்களுக்கு மங்கலத்தை அருளக் கூடியது. மகதநாட்டில் (இன்றைய பீகார்) குண்டினபுரம் என்ற ஊர் இருந்தது. இங்கு வசித்தவள் சாருமதி. கணவனுக்கும், மாமனார், மாமியாருக்கும் சிறந்த சேவை செய்தவள். அதிர்ந்து பேச மாட்டாள். வீட்டில் எவ்வளவு பிரச்னை இருந்தாலும், பொறுமையுடன் அணுகிச் சமாளிக்கும் தன்மை, பேச்சில் சாந்தம் ஆகியவை இருக்குமிடத்திற்கு, லட்சுமி தேடி வந்து விடுவாள். சாருமதிக்கும் அருள் செய்ய அவள் முன்வந்தாள். அவளது கனவில் தோன்றிய லட்சுமி, "உன் பொறுமைக்குப் பரிசளிக்கவே வந்துள்ளேன். நீ ஆவணி பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று என்னைக் குறித்து விரதமிருந்தால், உனக்கு சகல சவுபாக்கியங்களும் தருவேன்...' என, வரமளித்து மறைந்தாள்.
கணவரின் அனுமதி பெற்றே பெண்கள் விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பது விதி. அந்த விதிக்கேற்ப கணவர் மற்றும் மாமனார், மாமியாரிடம் அனுமதி பெற்ற சாருமதி, அந்த விரதத்தை அனுஷ்டித்தாள். அவளுடன் உறவுப் பெண்களும், பக்கத்து வீடுகளில் உள்ள உத்தமப் பெண்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆபரணம், குழந்தை பாக்கியம், வீடு, வாசல், கணவரின் அன்பு உள்ளிட்ட எல்லா பாக்கியங்களும் கிடைத்தன. இந்த விரதத்தை அனுஷ்டித்து, சகல சவுபாக்கியங்களையும் பெறுங்கள்.

No comments:

Post a Comment