நமது கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் கணபதி. உயர் நிலையில் இருக்கும் ஞானி ஆகட்டும், சராசரி மனிதனாகட்டும் கணபதியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உருவ நிலையிலும் சரி , பூஜா முறையிலும் சரி புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிசயம் விநாயகர். புராணங்கள் விநாயகரின் பிறப்பை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறினாலும், உள்ளார்ந்த ஞான நிலையில் கணபதியை புரிந்து கொள்ளும் நோக்கில் எழுதபட்டது தான் இந்த கருத்துக்கள்.
பாமரர்கள் புரிந்து கொள்ளுவதற்காக உருவகப்படுத்தபட்ட கதைதான் உமாதேவி தனது குளிக்கும் தருவாயில் விக்னேஷ்வரரை உருவாக்கினார் என்பது. அந்த கதையை உற்று நோக்கினால் சிவன் , சக்தியை காண வரும்பொழுது சிவனை தடுத்து போர் புரியும் பகுதி உண்டு. முடிவில் சிவன் விக்னேஷ்வரரின் தலையை கொய்து பிறகு யானையின் தலையை வைத்ததாக வரலாறு கூறுகிறது.
புராண கதையின் சுவையில் நாம் பக்தியுடன் இருப்பது தவறல்ல, ஆனால் அதை பற்றி சிந்திக்காத முட்டாளாக இருப்பது தவறு. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். சக்தி உருவாக்கிய விக்னேஷ்வரர் சிவனை பிரித்தரியாத மூட படைப்பாக இருக்க முடியுமா?
இல்லை சக்தி தான் அவ்வாறு உருவாக்குவாளா? அண்ட சராச்சரத்திற்கும் நாயகனான சிவன் தன் முன் இருக்கும் பாலகன் யார் என தெரியாமல் போர் புரிவாரா? இவை எல்லாம் திருவிளையாடலுக்காக என கொண்டாலும் தலையை கொய்து போடும் அளவிற்கா திருவிளையாடல் நடக்கும்.? எந்த அசுரனையும் வதம் செய்யாலம் அவனுக்கு வரம் மட்டுமே தருபவர் அல்லவா ஈசன்?
புராண கதைகள் அனைத்தும் கூறப்பட்டது உங்கள் மனதில் கணபதியின் உருவம் பதியவேண்டும் என்பதற்கும் உங்களின் பக்தி பெருகவேண்டும் என்பதற்குமே. ஆனால் நாத்திக வாதம் பேசும் சிலர் கணபதியின் உருவை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.
ஒரு வேடிக்கை கதை ஒன்று உண்டு. ஒரு நாத்திகரும், ஆத்திகரும் நண்பர்கள். தினமும் காலையில் ஒன்றாக நடைபயிற்சி செய்பவர்கள். நாத்திகர் கையில் தனது செல்ல நாய் குட்டியை பிடித்தபடி வருவது வழக்கம். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் கொள்கையில் வேறுபட்டவர்கள்.
ஆத்திகர் நடைப்பயிற்சியின் இடையே வந்த அரச மர விநாயகரை வழிபட்டு விட்டு நடையை தொடர்ந்தார். அப்பொழுது நாத்திகர் வேடிக்கையாக “நண்பரே இது என்ன முட்டாள் தனம் தினமும் இந்த கல்லை வணங்கலாமா? அதற்கு பதில் உயிர் உள்ள இந்த நாய் குட்டியை வணங்கலாமே. இது தான் என் சாமி..!” என்றார் கிண்டலாக. ஆத்திகர் புன்சிரிப்புடன், “நண்பரே .. உங்கள் நாய் குட்டியை என் சாமி மீதி போடுங்கள். என் சாமியை உங்கள் நாயின் மீது போடுகிறேன். எது சக்தி வாந்தது என தெரியும். சக்தி எதில் இருக்கிறது என முடிவு செய்ய வேண்டியது நாம் தான்..!” என்றார். கடவுளை எந்த பொருளிலும் காணலாம். ஆனால் இதில் தான் நீ காணவேண்டும் என சொல்லுவது அஹங்காரத்தின் அதிகாரமே தவிர வேறொன்றும் அல்ல.
வேடிக்கை கதைகள் இருக்கட்டும் கணபதியின் உருவம் ஏன் அப்படி இருக்கிறது?
விக்னேஷ்வரர் சாக்ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ - உ - ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லின் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக்கொண்டே கணபதியின் உருவை நினைத்துப்பாருங்கள்.
ப்ரணவ மந்திரம் என்பது அனாதி, அதாவது தோற்றமும் முடிவும் அற்றது. அது போல விக்னேஷ்வரரும் தோற்றமும் முடிவும் அற்றவர். ப்ரணவ மந்திரம் போன்று உருவமற்றவர். அதனால் மஞ்சளில் பிடித்தாலும் பிள்ளையார்தான், அரிசியில் பிடித்தாலும் பிள்ளையார்தான் , சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான் மற்றும் விக்ரஹம் ஆனாலும் பிள்ளையார்தான். உருவமற்றவரை எவ்வுருவில் அமைத்தால் என்ன?
அதனால் தான் அவருக்கு குழந்தை இல்லை. சம்சாரம் இல்லை என்கிறார்கள். கணபதி என்ற பெயருக்கு கணங்களுக்கு அதிபதி அதனால் கணபதி என்பார்கள். காணாதிபதே என்றால் கணங்களின் அதிபதி எனலாம். உண்மையில் கணம் என்றால் காலத்தின் அளவு கோல். அதனால் காலத்தை முடிவு செய்பவன் கணபதி காலத்திற்கு அதிபதி எனக்கூறலாம். விக்னேஷ்வரர் என்றால் விக்னம் - தடைகளை ஏற்படுத்துபவரும் நீக்குபவரும் என பொருள்படும்.
காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைபடாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகிவிடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது.
ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையான முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம். கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக்கூடியது அல்ல. அதை விவசாயம் செய்ய முடியாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம்புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக்காது. ஆகவே சுயம்பு தாவரமான அருகம்புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூபமாகும்.
மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமையான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற்று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது. ஞானிகள் எப்பொழுதும் விக்னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட்டுகிறது !
பிள்ளையாருக்கு பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகியோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிறது. பிரம்மா எனும் நிலை படைத்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்களை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இருக்கக்கூடாது.
நாடியும் விநாயகரும் :
ஆன்மீகத்தில் இருக்கும் மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன். உடலின் வலது பகுதி மூளையின் இடது பக்கதிலும் ; இடப்பகுதி வலது மூளையாலும் கட்டுபடுத்தப்படுகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.
நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் அமைந்திருக்கிறது.
கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முயற்சி செய்து விட்டு விநாயகரின் விக்ரஹ மகிமையை கூறவும். விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு.
விக்னேஷ்வரர் உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்டவர் அதனால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள். பிராணன் இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அரசமரம் மூலம் சுத்தப்படுத்துகிறோம்.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை அதனால் தான் இது விநாகயர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுவோம். வாருங்கள் ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.
No comments:
Post a Comment