Sunday, October 10, 2010

சரஸ்வதிக்கே சாபம்




சிவனது திருவிளையாடலில் இந்த வாரம் 'சங்கப்பலகை கொடுத்த படலம்' பற்றி காண்போம். ஒரு சமயம் பிரம்மா பத்து அசுவமேத யாகம் செய்து, நீராடுவதற்காக சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி மூவரோடும் கங்கைக்கு சென்றார். அப்படி செல்லும் வழியில் சரஸ்வதி ஒரு பெண்ணின் இசையில் மயங்கி நின்றதால் பிரம்மா சாவித்திரி, காயத்ரியோடு கங்கையில் நீராடினார். தன்னை விட்டு விட்டு இவர்கள் நீராடியதால் சரஸ்வதி கோபித்துக்கொண்டார். இதையறிந்த பிரம்மா, ''குற்றம் உன்மீது இருக்க என் மீது நீ கோபித்ததால், அளவில்லாத மனிதப்பிறவி எடுப்பாய்'' என சாபமிட்டார். மனம் வருந்திய சரஸ்வதி, தங்களது அருமைத்துணைவியான நான் மனிதப்பிறவி எடுத்து மயங்கலாமா என மன்றாடினாள். மனமிறங்கிய பிரம்மா, பாண்டிய நாட்டில் அகரம் நீங்கலாக மீதி உள்ள நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக பிறக்கட்டும் என்று சாபத்தை மாற்றி தந்தார். அகரம் என்பது முதல் எழுத்து. அதே போல் ஆதி பகவனே உலகத்துக்கு முதல்வனானான். எனவே ஆதி பகவானான சோமசுந்தரர், இந்த முதல் இடத்துக்கு புலவராக வருவார் என கூறி மறைந்தார்.

இதன் படி நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக தோன்றினர். அவர்கள் வடமொழியும் தமிழும் நன்கு கற்றவராக விளங்கி, அகத்தியர் முதல் தொல்காப்பியர் வரை எழுதிய இலக்கண நூல்களை ஆராய்ந்தனர். மற்றும் பல பாடல்களை பாடினர். இவர்களை எல்லாம் சோமசுந்தரர் ஒரு புலவராக அவதரித்து மதுரைக்கு கொண்டு வந்தார்.

வங்கிய சேகர பாண்டியன், அப்புலவர்களுக்கு பரிசுகள் பல தந்து, சங்க மண்டபம் ஒன்று அமைத்து தந்தான். அப்புலவர்கள் தங்கள் புலமையால் பிற தேசத்து புலவர்களை வென்றனர். ஒரு நாள் அவர்கள் புலமையை அறிய சங்கப்பலகை தருமாறு வேண்டினர். சிவனும் அவ்வாறே பலகை தந்ததுடன், தானும் அவர்களுடன் ஒரு புலவராய் வந்து விளங்கினார். புலவர்கள் பல அரிய நூல்களை இயற்றினர்.

வில்வத்தின் விளைவு: கைலாயத்தில் உள்ள சோலையில் ஒரு வில்வ மரத்தடியில் சிவன் பார்வதி தேவிக்கு சிவாகமங்களை உபதேசித்து கொண்டிருந்தார்.வில்வ மரத்திலிருந்த கருங்குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து சிவன் மீதும், பார்வதி மீதும் பாதம் முதல் தலை வரை போட்டது. குரங்கின் இந்த செயலால் கோபத்துடன் மேலே பார்த்தார் பார்வதி. உடனே குரங்கிற்கு அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் வரப்பெற்றது. உடனே குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் பாதத்தில் விழுந்து அடியேன் செய்த பிழையை பொறுத்தருள்க என வேண்டியது.

அதற்கு சிவன், ''குரங்கே நீ கவலைப்பட வேண்டாம். ஒரு வில்வ இலையால் எம்மை அர்ச்சித்தாலே எல்லா நலன்களும் கிடைக்கும். ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளைப்பறித்து எம்மீது போட்டுள்ளாய். ஆகவே நீ மண்ணுலகில் அரிச்சந்திர குலத்தில் அரசனாகப்பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவித்து பின் கயிலை வந்து சேர்வாயாக'' என அருள்புரிந்தார்.
இப்படித்தான் தீபாவளித் திருநாள்


விஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் பவுமன். சிவபெருமானிடம் பக்தி கொண்ட இவன் சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு இணையாக விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று நிபந்தனையுடன் வரம் ஒன்றையும் பெற்றான்.

இறைவனால் அளிக்கப்படும் நல்ல வாய்ப்புகள் நல்ல வழியில் செல்லும் பொழுது நன்மை கிடைக்கிறது. ஆனால் அதிகமான செல்வம், அதிகாரம் போன்றவை வந்து விட்டால் மனம் தவறான பாதையை நோக்கியே போகிறது. பவுமனும் இப்படித்தான் தவறான வழிகளில் சென்றான். தன்னைப் பற்றித் தாயிடம் புகார்கள் சென்றாலும் தாய் எப்படித் தன்னைக் கொல்வாள் என்கிற எண்ணத்தில் தவறுகளை அதிகமாக்கிக் கொண்டே இருந்தான். பூலோகத்தில் இருந்த மக்களும், தேவலோகத்தில் தேவர்களும் இவனுடைய கொடுமைகளால் மிகவும் பாதிப்படைந்தனர்.

சிவனிடம் சொன்னார்கள். விஷ்ணுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல்லத் தயங்கினார்கள். தாயான பூமாதேவியோ, பிறர் தனக்கு செய்யும் கொடுமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமைசாலி. சொந்த மகனைக் கொல்ல அவள் சம்மதிப்பாளா? என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான்.

இருப்பினும் தாயான பூமாதேவி அவனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார்.பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.

அவன் இறக்கும் சமயத்தில் பூமாதேவிக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், "எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

இப்படித்தான் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியது.

  • இறைவனுக்கே மகனாக இருந்த போதிலும் சில நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும்.

    தாய் ஒருவனை எவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.
  • இறப்பு என்பது தவிர்க்க இயலாது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும்.
-இப்படி சில படிப்பினைகளைச் சொல்லும் தீபாவளி சொல்வது இதுதான்.

நல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் எனும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்குப் பயனுடையதாய் வாழுங்கள்.

No comments:

Post a Comment