நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும்.
ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.
முகத்துக்கு நேரே சிரிப்பவன்,
முகஸ்துதி செய்பவன்,
கூனிக் குழைபவன்,
கூழைக் கும்பிடு போடுபவன்,
இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.
ஆனால் எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்!
ஆகவே ஒருவனை நண் பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
நன்றாக ஆராய்ந்து, `இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது.
“அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும்” என்றான் வள்ளுவன்.
தேரான் தெளிவும் தெளிந் தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
சரி, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழகவேண்டும்.
கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக் கருதக்கூடாது.
வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும்.
உனக்குக் கஷ்டம் வந்தபோது அவன் கைகொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால்,
பிறர் உன்னைப்பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால்,
அவனை நீ நம்பத் தொடங்கலாம்.
தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், அவனை நண்பனாக நீ வரித்துக் கொள்ளவேண்டும்.
பல இடங்களில் ஒரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன்மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.
நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல.
ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு.
நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால், அதுதான் நட்பு.
“முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு.”
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
என்றான் வள்ளுவன்.
நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல்.
பாடல் மறந்துபோய் விட்டது. விளக்கம் இதுதான்:
ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று, வாழைமரம் போன்றவர்கள்.
பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல.
பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை.
அது தானாகவே முளைக்கிறது.
தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது.
தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது.
நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன்.
தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது.
அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப் பலன் தருகிறது.
அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.
வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது.
அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.
இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன்.
எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்.
எனக்குக் கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவரே அப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தார்கள் என்பது பொருத்தம்.
மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் பணம் பறிப்பதற்காகவே நண்பர்களாக இருந்தார்கள்.
அதிலே நான் ஏமாளியாக இருந்தேன் என்பதை ஒப்புக் கொள்வதில் வெட்கமில்லை.
ஆனால், என்னை ஏமாற்றிய நண்பர்கள் எல்லாம் இன்று செல்வாக்கிழந்து `கோழி மேய்க்கிறார்கள்’ என்பதை எண்ணும்போது, சிநேகிதத் துரோகிகளுக்கு இறைவன் அளிக்கும் தண்டனையைக் கண்டு, நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மற்றவர்களுக்கு அந்த அனுபவம் வரக்கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
இந்துக்களின் இதிகாசங்கள், நல்ல நண்பன் எப்படி இருப்பான் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
ஸ்ரீராமனுக்குக் கிடைத்த நண்பர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால், துன்பங்களே இல்லாமல் போய்விடும். ஸ்ரீராமனின் துன்பங்களை யார் யார் பங்கு போட்டுக் கொண்டார்கள்?
அதை ரகுநாதனின் வாய்மொழியாகக் கம்பன் சொல்கிறான்.
“குகனொடும் ஐவரானோம்
முன்பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவ ரானோம்
எம்முறை அன்பின் வந்த
அகமலர் காதல் ஐய
நின்னொடும் எழுவ ரானோம்!”
வீடணன் நண்பனானபோது, வீடணனைப் பார்த்து ஸ்ரீ ராமன் சொன்ன வார்த்தைகள் இவை.
“வீடணா! நானும் இலக்குவனும், பரதனும், சத்துருக்கனனும் நான்கு சகோதரர்களாகப் பிறந்தோம்.
கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்தபோது, நாங்கள் ஐவரானோம்.
சுக்ரீவன் எங்களோடு சேர்ந்தபோது நாங்கள் அறுவரானோம்.
உன்னைச் சேர்த்து இப்போது எழுவராகி விட்டோம்.”
ஆம்! ராமனுக்கு அவர்கள் செலுத்திய அன்புக் காணிக்கை ராமனுடைய சகோதரர்களாகவே அவர்களை ஆக்கிவிட்டது.
நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடிவாய்க்கப் பெற்ற ஒருவன் நண்பனாக மட்டுமின்றிச் சகோதரனாகவும் ஆகிவிடுகிறான்.
நண்பர்கள் தனக்கு உதவி செய்தார்கள் என்பதற்காகத் தன் சொந்த சகோதரர்களையே விரோதித்துக் கொண்டு செஞ்சோற்றுக் கடன் கழித்து, ஒருவன் மகாபாரதத்தில் காட்சியளிக்கிறான்.
அவனே கர்ணன்.
கர்ணன் குந்தியின் மகன்; பாண்டவர்களின் சகோதரன்.
கௌரவர்கள் அவனிடம் பாராட்டிய நட்புக்காக, அவர்கள் செய்த உதவிக்காக, போர்க்களத்தில் தன் சகோதரர்களையே எதிர்த்தான் கர்ணன்.
நட்பு என்பதும், செஞ்சோற்றுக் கடன் கழித்து நன்றி செலுத்துவது என்பதும் இந்துக்களின் மரபு.
அந்த மரபின், நட்பின் மேன்மையை வற்புறுத்தும் புராணக் கதைகள் பலவுண்டு.
நல்ல மனைவியை எப்படி இறைவன் அருளுகிறானோ, அப்படியே நல்ல நண்பர்களை அருளுமாறு இறைவனைப் பிரார்த்திப்பது நல்லது.
No comments:
Post a Comment