ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தன்மையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும், சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.
ஆன்மாக்கள் நல்வினை, தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந்துழலும்.
நால்வகைத் தோற்றங்கள்:
அண்டசம், சுவேதசம், உற்பிச்சம்,சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் வியர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சுராயுசம் கருப்பையிற் தோன்றுவன.
எழுவகைப் பிறப்புகள்:
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.
கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வியர்வையிலே கிருமி, பேன் முதலிய சில ஊர்வனவும் விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர், கொம்பு, கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம்.
தேவர்கள் பதினொரு நூறாயிர யோனி பேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனி பேதம், நாற்கால் விலங்குகள் பத்து நூறாயிரயோனி பேதம், பறவை பத்து நூறாயிரயோனி பேதம், நீர்வாழ்வன பத்து நூறாயிரயோனி பேதம், ஊர்வன பதினைந்து நூறாயிரயோனி பேதம், தாவரம் பத்தொன்பது நூறாயிரயோனி பேதம் ஆக எண்பத்து நான்கு நூறாயிரயோனி பேதம்.
ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், காது எனும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என ஆறு வகைப்படும். புல்லும்,மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள்.
சிப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள். கரையானும், எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தகத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும், வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும், பறவையும் அந்நான்கினோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும், மனிதர்களும் அவ்வைந்தினோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.
ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அனுபவிக்கும். அப்படி அனுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இருவினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து அவைகளின் பயன்களாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும்.
இப்படியே,தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும், காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.
இப்படி பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகள் எல்லாவற்றிலும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.
இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது. உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சில காலம் வாழ்ந்து அழியினும் அழியும். மூன்று வயதுக்கு மேல் பதினாறு வயது வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும்.
அதற்கு மேல் நாற்பது வயது வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மைதான். அழியுங்காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்தச் சரீரம், உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.
titanium wedding bands for men - Tioga Wedding Arts
ReplyDeleteSteve Wynn knows that ceramic or titanium flat iron his legacy has many great titanium powder memories. These tattoos can be purchased on his website, his wedding ring, wedding titanium (iv) oxide ring, titanium guitar chords wedding mens titanium watches