Sunday, October 10, 2010

விபாசனா தியானம்

புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித்தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. புத்த மத நூல்களில் 'பாலி' மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான
முறை காணப்படுகிறது.






இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல
நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.

எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, மருத்துவமனைகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர். இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். "அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்" என்று அவர் நண்பர் சொன்னார்.
ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டு "என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கோயன்கா சொன்னார்.

கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் "தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது" என்று சொல்லிவிட்டார்.
திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது, "இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை" என்று ஊ பா கின் கூறினார். விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப்
பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின்.

"சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம். ஆனால் அடிமனதைத்
தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்."

(ஆன்மிகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே
வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது).

அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார்.
விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.
1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன்.
தியானப் பயிற்சி முகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.
6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.
மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது. எனவே அந்த தியான முகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு
அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.



No comments:

Post a Comment