Sunday, October 10, 2010

ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆலயம்.




ண்கள் மட்டுமே வழிபடும் கோயில்! தமிழ்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தெல்லாம் பக்தர்கள் வருகைதரும் கோயில்! புதிதாக தொழில் துவங்குபவர்கள் தங்கள் தொழில் செழித்து வளர்வதற்காக முதன்முதலில் செல்லும் கோயில்! வியாபாரிகள் தங்கள் விசிட்டிங் கார்டை வேலில் குத்தி வணங்கிச் செல்லும் கோயில்!


இவையெல்லாம் எந்தெந்தக் கோயில்களில் நடக்கிறது என்று கேட்டால், அதற்கு விடை 'ஒரே கோயிலில்' என்பதுதான்! அது மாம்பாறை முனியப்பன் கோயில்!

கரூரிலிருந்து பழநி செல்லும் வழியில் மலைகள் சூழ்ந்த மாம்பாறை என்ற இடத்தில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது முனியப்பன் கோயில்.

பிரமாண்டமான மூன்று குதிரைகளின் சுதை வடிவங்கள். அதன் முன்பு வேல்கள் நடப்பட்டிருக்க அருகே வெள்ளியால் செய்யப்பட்ட முனியப்பனின் கண் உருவத்துடன் எளிமையாகக் காட்சி தருகிறது கோயில்.

தினமும் நூற்றுக்கணக்கான ஆண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற இங்கு வருகிறார்கள். இக்கோயிலுக்கு இதுவரை பெண்களே வந்ததில்லை. பிறந்த பெண் குழந்தைகளைக் கூட இங்கு கொண்டு வந்ததில்லையாம். அதற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் இப்பகுதியில் மலைமேல் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு கனி மட்டுமே பழுத்துத் தொங்கியது. அந்த அதிசயக் கனியை ஆற்றல் மிக்க கனியாக மாற்றுவதற்காக, அம்மரத்தடியில் அமர்ந்து முனிவர் ஒருவர் தவமியற்றி வந்தார்.






அச்சமயம், அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தம்பதியர் கண்ணில் அந்த மாங்கனி தென்பட்டது.
மனைவி அந்த மாங்கனியை விரும்ப, கணவன் கல்லை எறிந்து அந்தக் கனியைக் வீழ்த்தி விட்டான்.

இதையறிந்து கடுங்கோபம் கொண்ட முனிவர், இனிமேல் இந்த இடத்திற்குப் பெண்களே வரக்கூடாது என சாபமிட்டதோடு, தம் ஆற்றலால் அந்தக் கனியை மீண்டும் மர த்திலேயே இருக்கும்படி செய்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை பெண்கள் யாரும் இப்பகுதிக்கு வருவதில்லையாம். முனிவர் தவமிருந்த இடத்தில் உருவானது தான் இந்த முனியப்பன் கோயில்.

முனியப்பனிடம் வேண்டிக் கொண்டவர்கள் அடுத்த வருடமே தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த இங்கே வந்து விடுவது, அவனது ஆற்றலுக்கு சாட்சி!

இக்கோயிலுக்கு வேண்டுதலை நிறைவேற்ற வரும் ஆண்கள் கிடா வெட்டி, தாங்களாகவே அம்மியில் மிளகாய் அரைத்து, வெங்காயம் உரித்து, பொங்கல் வைத்து என, சகல சமையல் வேலைகளையும் செய்து முனியப்பனுக்கு பூஜை செய்யும் காட்சி வித்தியாசமாக இருக்கிறது. இப்பூஜை பிரசாதங்கள் எவற்றையும் வீட்டுக்குக் கொண்டு செல்வதில்லையாம்.

இவ்வழக்கத்தை இன்று வரை அவர்கள் தவறாமல் கடைப்பிடித்து வருவது வியப்பாகத்தானே இருக்கிறது!

கரூரிலிருந்து பழநி செல்லும் வழியில், ஒட்டன்சத்திரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது, மாம்பாறை முனியப்பன் கோயில்.


No comments:

Post a Comment