Sunday, October 10, 2010

பிறருக்கு கேடு நினைத்தால்

ஒரு ஊரில் ஒரு ராஜா. அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள், வித்வான்கள், புலவர்கள்… இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம், சன்மானம் எல்லாம் கொடுப்பதுண்டு. அதேபோல ராஜாவுக்கு சலவைக்கு, ஸ்நானம் செய்து வைக்க, சவரம் செய்ய, எண்ணை தேய்க்க என சில தொழிலாளிகள் இருந்தனர்.
ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும் தொழிலாளிக்கு, அங்கிருக்கும் வித்வானை கண்டால் பிடிக்காது. அந்த வித்வானை ஒழித்துவிட வேண்டும் என்று தோன்றியது.
ஒரு நாள், ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும்போது, “மகாராஜா… எனக்கு ஒரு குறை இருக்கிறது!’ என்று சொல்லி, கும்பிடு போட்டான். ராஜாவும், “என்ன அது?’ என்று கேட்டார். “பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணை தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணை ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணை தேய்க்கின்றனரோ, என்னவோ; அதுதான் என் குறை!’ என்றான்.
“அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார் ராஜா. “நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே… அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே… அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே!’ என்றான்.
ராஜாவும், “ஓ… அப்படியா? சரி… நான் நாளைக்கே அவரிடம் சொல்லி, போய் வரச் சொல்கிறேன்!’ என்றார். எண்ணை தேய்ப்பவனுக்கோ சந்தோஷம். வேத வித்வானிடம் விஷயத்தைச் சொன்னார் ராஜா.
வித்வான் யோசித்தார். “சரி… இது அந்த எண்ணை தேய்ப்பவனின் வேலை தான்!’ என்று யூகித்துக் கொண்டார். “அப்படியே ஆகட்டும் மகாராஜா… அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். இடுகாட்டில் ஒரு தளம் அமைக்கச் சொல்லுங்கள். நல்ல நாள் பார்த்து, நான் அதில் படுத்துக் கொள்வேன். சிதை அடுக்கி நெருப்பு வைத்து விடுங்கள்.
“பிறகு எட்டு நாட்கள் கழித்து நான் திரும்பி வருவேன். அதுவரையில் யாருமே அங்கு வரக்கூடாது!’ என்றார்; ராஜாவும் ஒப்புக் கொண்டான்.
இடுகாட்டில் தளம் அமைக்க உத்தரவிட்டான். குறிப்பிட்ட நாளில் அதில் படுத்துக் கொண்டார் வித்வான். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணை தேய்ப்பவர் இதை நேரில் நின்று பார்த்துவிட்டு, “அப்பாடா… தொலைந்தான்!’ என்று சந்தோஷப்பட்டான்.
இந்த வித்வான் ரகசியமாக ஒரு வேலை செய்தார். யாருக்கும் தெரியாமல் சிதை அடுக்கிய தளத்துக்கு அடியிலிருந்து தம் வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். சிதைக்கு நெருப்பு வைத்ததும், இவர், ரகசியமாக சுரங்கப்பாதை வழியாக வீட்டுக்கு போய், ஒளிந்து கொண்டார்.
எட்டாவது நாள் திரும்பி வருவதாக ராஜாவிடம் சொல்லியிருந்ததால். அவனுக்காக மாலையுடன் காத்திருந்தார் ராஜா.
எண்ணை தேய்ப்பவனும் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, “ஹூம்.. இனி வித்வானாவது, வருவதாவது!’ என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம்! குறிப்பிட்ட நேரத்தில் சிதையை கலைத்துக் கொண்டு வெளியே வந்தார் வித்வான். ராஜாவிடம் போய் வணக்கம் தெரிவித்தார்.
மாலை போட்டு மரியாதை செய்து, “பெரிய ராஜாவை பார்த்தீர்களா… எப்படி இருக்கிறார்? என்ன சொன்னார்?’ என்று ஆவலோடு கேட்டார் ராஜா. வித்வானும், “அவர் நன்றாகவே இருக்கிறார்; ஆனால், எண்ணை மட்டும் தேய்த்துக் கொள்வதில்லையாம். அவருக்கு, நம்மிடம் உள்ள எண்ணை தேய்ப்பவர் வந்தால் தான் திருப்தியாம்… அதனால், அவரை உடனே அனுப்பச் சொன்னார்!’ என்றார்.
ராஜாவும் எண்ணை தேய்ப்பவரைக் கூப்பிட்டு, “நீ நாளைக்கே புறப்பட்டு போய் பெரிய ராஜாவுக்கு எண்ணை தேய்த்து விடு! உனக்காக சிதை தயாராக இருக்கும்!’ என்று உத்தரவு போட்டார். எண்ணை தேய்ப்பவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ராஜாவின் காலில் விழுந்து, வித்வானை ஒழித்துக்கட்டவே, தான் அப்படிச் சொன்னதாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டான்.
ராஜாவுக்கு கோபம் வந்தது. எண்ணை தேய்ப்பவனை உடனே நாடு கடத்த உத்தரவிட்டு, வித்வானிடம் மன்னிப்பு கேட்டான். தான் தெரியாத்தனமாக, அவன் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டதற்காக வருந்தினான்.
“பிறருக்கு கேடு நினைத்தால் தனக்கே கேடு விளையும்!’ என்று இப்போது புரிகிறதா? எனவே, பிறருக்கு கேடு நினையாதீர்.

No comments:

Post a Comment