Sunday, October 10, 2010

கர்வத்தை அழிக்கும் ராமமந்திரம்!


சிலர் பக்திப்பூர்வமாக, 'ராமா' என்பர். வேறு சிலரோ, ஏதாவது தவறு செய்து விட்டால், தலையில் அடித்தபடியே, 'ராமா ராமா' என்பர். தொனி தான் மாறுபடுமே தவிர, ராம மந்திரத்தை எப்படிச் சொன்னாலும், அதற்குரிய பலன் கிடைக்கும்; குறிப்பாக, ராம மந்திரம் கர்வத்தை அழிக்கும் சக்தியுடையது.
ராமாயணத்தில் பலவகை உண்டு. அதில் ஆனந்த ராமாயணம் என்பதும் ஒன்று. இதில் ஒரு காட்சி —
இலங்கையில் சீதையை சந்தித்த பின், திரும்பிக்கொண்டிருந்த ஆஞ்சநேயர், வானில் பறந்தபடியே நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அசை போட்டார். கடல் தாண்டிச் சென்றது, ராவணனின் மகனைக் கொன்றது, ராவணனையே நேரில் சந்தித்தது, இலங்கைக்கு தீ வைத்தது, வடிவங்களை சுருக்கியும், நீட்டியும் சீதையைக் கண்டுபிடித்தது போன்ற தான் செய்த செயல்களை நினைத்த வுடனேயே கர்வம் அவரைத் தொற்றிக் கொண்டது. 'என்னை விட பலசாலி யார் உண்டு?' என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டே பறந்தார்.
வழியில் தாகம் எடுத்தது. மகேந்திர கிரி என்னும் மலை அப்போது கண்ணில் பட்டது. அந்த மலையில் நீர்நிலை ஏதாவது இருக்கலாம் என வட்டம் போட்டு பார்த்தார்; கண்ணில் ஏதும் படவில்லை. ஓரிடத்தில் ஒரு முனிவர் இருப்பது புலப்பட்டது. அவர் முன்னால் இறங்கியவர், தண்ணீர் இருக்குமிடத்தைக் காட்டும்படி கேட்டார்.
முனிவர் பேசவில்லை; ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினார். ஆஞ்சநேயர் அவர் முன்னால், தன்னிடமிருந்த ராமனின் முத்திரை மோதிரம், சீதையின் சூடாமணி ஆகியவற்றை வைத்துவிட்டு போனார். அப்போது ஒரு குரங்கு வந்து, அங்கிருந்த சூடாமணியையும், முத்திரை மோதிரத்தையும் அருகில் இருந்த முனிவரின் தீர்த்தச்செம்புக்குள் போட்டுவிட்டது.
ஆஞ்சநேயர் திரும்பி வந்து பார்த்தார்; பொருட்களைக் காணாமல் முனிவரிடம் கேட்டார். முனிவர் செம்பை நோக்கி கையை நீட்டினார். அதை ஆஞ்சநேயர் பார்க்க அதனுள் ஏராளமான முத்திரை மோதிரங்கள் கிடந்தன.
'இவை எப்படி இதனுள் வந்தன? எல்லாம் ஒன்றுபோல் உள்ளதே... இதில் என்னுடையதை எப்படி கண்டுபிடிப்பேன்?' என்றதும், முனிவர் பதிலளித்தார்.
'வானரனே... இதற்கு முன் பலமுறை பெருமாள், ராமாவதாரம் எடுத்துள்ளார். அப்போதெல்லாம் ஆஞ்சநேயர் வருவார்; என் முன்னால் வைப்பார். என் தீர்த்தச் செம்பிற்குள் அதை ஒரு குரங்கு தூக்கிப் போட்டு விடும். இவை எல்லாமே ராமனுக்குரியவை தான்...' என்றார்.
ஆஞ்சநேயர் வெட்கிப்போனார். 'அப்படியானால், பல யுகங்களில் பல ஆஞ்சநேயர்கள் இதே சாதனையைச் செய்துள்ளனரே... நான் மட்டுமே செய்ததாக கர்வம் கொண்டேனே...' என வருந்தினார்.
எவ்வளவோ முயன்றும் மோதிரத்தைக் கண்டுபிடிக்க இயலாமல், ஊர் திரும்பினார். ராமனிடம் தன் அனுபவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்.
அப்போது ராமனின் அருகில் அதே தீர்த்தச் செம்பு இருந்தது; உள்ளே பார்த்தால் அனுமன் கொண்டு சென்ற முத்திரை மோதிரம் கிடந்தது. 'இதெப்படி இங்கே வந்தது?' என்றதும், 'ஆஞ்சநேயா... என் பக்தனான உன் மனதில் கர்வம் தோன்றியவுடனேயே நான், நீ வந்த பாதையில் முனிவர் போல் அமர்ந்திருந்தேன். உன் கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன். 'ராம' மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததால், உன் கர்வம் நீங்கிற்று!' என்றார்.
ராமபிரானின் பிறந்தநாளான ராமநவமியன்று நம்மிடமுள்ள துளியளவு கர்வம் கூட அகல ஸ்ரீராமனை வேண்டுவோம்.



No comments:

Post a Comment